Saturday, December 13, 2008

Prof.K.Kailasapathy -75

[12 - December - 2008]
-தெ. ஞா. மீநிலங்கோ-
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் கைலாசபதியின் தடம் மிகவும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஈழத்தில் தேசிய இலக்கியம் பற்றியும் அதன் சேவை பற்றியும் பேராசிரியர் கைலாசபதி நிறையவே எழுதியுள்ளார். ஈழத் தமிழ் இலக்கியத்துக்குரிய தனியான தன்மையை எடுத்துக் காட்டியதோடு பல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் ஊக்குவித்து வளர்ப்பதற்கு கைலாசபதியின் பணி முக்கியமானது.
அதிலும் முக்கியமான அம்சம் ஏதெனில் ஈழத்து ஆக்க இலக்கியம் பற்றித் தமிழகத்தின் இலக்கியவாதிகள் சிலர் வெளியிட்ட தாழ்வானதும் தவறானதுமான எண்ணத்தை மறுதலித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்ததுதான். இது கைலாசபதி ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த அரும்பணி.
இவை இப்படி இருக்க, கைலாசபதியின் அடையாளத்தைச் சிதைக்கிற வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை. இவை வேறுபட்ட நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன. கைலாசபதியின் அரசியல் சார்பையும் ஆக்கங்களையும் மறைக்கிற முயற்சிகள் இதில் பெரும்பாலானவை.
மற்றவை கைலாசபதி இப்போது உயிரோடு இருந்தால் தமிழ்த் தேசியவாதத்துக்குச் சார்பாக மாறி இருப்பார் என்பது. கைலாசபதியை யார் ஏன் போற்றுகிறார்கள் என்பதோ யார் ஏன் தூற்றுகிறார்கள் என்பதோ நமக்கு முக்கியமானதல்ல. கைலாசபதி ஆற்றிய பணிகளை எவ்வாறு வளர்த்து முன்னெடுப்பது என்பதே நமது அக்கறையாக இருக்க வேண்டும். இதைச் செயற்படுத்தும் முகமாகவே தேசிய கலை இலக்கியப் பேரவை கைலாசபதியின் பவள விழாவை இந்த ஆண்டு நடத்துகிறது.
""உலகை விரிவுபடுத்திக் கொண்டு போகிறோம். அப்போதெல்லாம் வெவ்வேறு அளவிலும், உருவிலும், சமூக, பொருளாதாரச் சக்திகளை இனங்கண்டு கொள்கிறோம். ஆனால், அந்தச் சக்திகளை மட்டும் கண்டு காட்டுவதல்ல இலக்கியம். அவற்றின் மத்தியில் மனிதனைக் காண்பதே இலக்கியம்.
தேசிய சக்திகளை மட்டும் கண்டு காட்டுவது நிகழ்கால வரலாறாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சரித்திர கால கட்டத்தில் வாழும் மனிதனைப் பூரணமாகவோ, குறையாகவோ காட்டுவதில்தான் இலக்கியத்தின் வெற்றி தங்கி இருக்கின்றது.
அவ்வாறு மனிதனைக் காணும் போதுதான் மனிதன் தேசிய வரம்பிற்குள்ளிருந்து தேசியக் கட்டுப்பாடுகளைக் கடக்கிறான். மனிதன் உலகப் பொதுவானவனாக இருப்பதால் அவன் வாழ்க்கை இலக்கியமாகப் படைக்கப்படும் போது தேசிய வரம்புகளைக் கடந்துவிடுகிறது.
வெறுமனே ஒரு நாட்டைப் பிரதிபலிப்பது தேசிய இலக்கியமாகாது. தேசிய இலக்கியம் என்று நாம் கூறும்போது இலக்கியம் படைப்பவர்களின் இலட்சியம், நோக்கம் முதலியவற்றையும் சேர்த்தே எடைபோடுகிறோம். சுருங்கக் கூறின் தேசிய இலக்கியமென்பது ஒருவிதப் போராட்ட இலக்கியமாகும்' என்று தேசிய இலக்கியம் பற்றிச் சொல்கிறார் பேராசிரியர் கைலாசபதி.
கைலாசபதி இலங்கையின் தேசிய இலக்கியம் என்ற கண்ணோட்டத்திலேயே இயங்கினார். அவரது கண்ணோட்டத்தில் இந்தியாவுடனான பகைமை உணர்வு இருக்கவில்லை. அதேநேரம், ஈழத்தில் தனித்துவம் பேணப்பட வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறையாக இருந்தார். இரு நாடுகளுக்குமிடையில் ஒரு சமத்துவமான முறையில் இலக்கியப் பரிமாறல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். இது இன்றைய நிலையில் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது.
ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கியம் என்னும்போது இந்தியாவோடு இருக்கின்ற சில பொதுவான பண்புகளைத் தூக்கி எறிய இயலாத அதேவேளை, ஈழத்தின் தனித்துவமான பண்புகளைக் கவனத்தில் எடுக்காமிலிருக்கவும் இயலாது. இலங்கையில் மற்ற சமூகங்களுடன் சேர்ந்து வாழ்கின்றோம் என்பதையும் புறக்கணிக்க முடியாது.
தமிழ் இனம் என்பதை தமிழ்த் தேசிய இனம் என அறிவித்து தமிழ்த் தேசிய இலக்கியம் என்று கொள்ளும் போது இதே பாதை இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கும் பொருந்தும். இங்கே ஒவ்வொன்றும் மற்றதுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.
இந்த விடயத்தில் தேசியவாதம் தமிழ்த் தேசியத்தை மட்டும் முதன்மைப்படுத்தி முஸ்லிம் தமிழ் இலக்கியத்தையும் மலையகத் தமிழ் இலக்கியத்தையும் பகைமையாகப் பார்க்கிற தன்மை இருக்கின்றது. இவ்விடத்தில் தான் தேசியமும் தேசியவாதமும் வேறுபடுகின்றன.
தேசிய இலக்கியம் என்பது ஒரு தேசியவாத இலக்கியம் அல்ல. தேசிய இலக்கியம் என்பது ஒரு வகையில் ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்தக் கூடிய இலக்கியம் என்றே கொள்ள முடியும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் தேசிய இலக்கியம் எனப் பேசப்பட்டதெல்லாம் இலங்கையை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டு அதில் தமிழ்த் தேசிய இனத்தின் நிலைப்பாடு குறித்து தமிழில் எழுதப்பட்டவையே.
தேசியம் என்பதை பரந்த நோக்கிலேயே பார்க்க வேண்டிய தேவை உள்ளது. ஒரு இலக்கியத்தைத் தேசிய இனத்துக்குள்ளோ அல்லது ஒரு தேசத்துக்குள்ளோ மட்டும் இறுக்கமாக மட்டுப்படுத்த இயலாது.
தேசியம் பற்றியும் தேசிய இலக்கியம் பற்றியும் சொல்லும் போது கைலாசபதி பின்வருமாறு சொல்கிறார்; ""அரசியல் அரங்கில் ""தேசியம்' என்னும் சொல் குறித்த விதேசிய எதிர்ப்பு உணர்ச்சி, சுதேசிய நாட்டம் என்பனவற்றோடு சுதேசிய நாட்டத்தின் தன்மையையும் தகைமையையும் மண் வாசனை என்னும் தொடர் புலப்படுத்தியது. ஆனால், அந்தளவுடன் விடயம் முடிந்துவிடவில்லை. விதேசியத்தின் எதிர் நிலையான சுதேசியம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்பதிலும் தேசிய இலக்கியவாதிகளுக்கும் ஆழ்ந்த அக்கறை இருந்தது.
ஈழத்தவர் என்பதற்காக மட்டும் எழுத்தாளர்களைப் பாராட்டுதல் கூடாது என்னும் கருத்தும் தேசிய இலக்கியக் கோட்பாட்டின் முக்கியமான உட்கிடையாயிருந்தது. சுருங்கச் சொல்வதாயின் விதேசியச் செல்வாக்குகளையம் ஊடுருவல்களையும் வெளிப்படையாக எதிர்த்ததைப் போலவே, தமது மத்தியில் இச் செல்வாக்குகளுக்கும் ஊடுருவல்களுக்கும் வாயில்களாய் இருந்தவர்களையும் அவர்களது கருத்துகளையும் கண்ணோட்டங்களையும் தேசிய இலக்கியவாதிகள் எதிர்த்துப் போராடினர். இதனால் தொடக்கத்திலிருந்தே தேசிய இலக்கியம் என்பது போர்க்குணமிக்க இயக்கசக்தியாயும் விளங்கியது. போர்க்குணம் அதன் சிறப்பியல்புகளில் ஒன்றாய் அமைந்துவிட்டது'.
கைலாசபதி இன்று உயிருடன் இருந்தால் தமிழ்த் தேசியவாதம் பற்றி அவரது நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதற்கான விடையை அவர் எந்தவிதமான அரசியல் சிந்தனையின் அடிப்படையில் செயற்பட்டார் என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டியுள்ளது. கைலாசபதி மாக்ஸிய லெனினிய சிந்தனையை ஏற்றவர். பாராளுமன்றப் பாதையை நிராகரித்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டபோது தடுமாற்றமின்றித் தன்னை மாக்ஸிய லெனினியவாதிகளுடன் அடையாளப்படுத்தியவர். திரிபுவாதிகளுடன் நின்றவர்கள் அனுபவித்த, அனுபவித்திருக்கக் கூடிய சலுகைகளையும் வாய்ப்பு வசதிகளையும் அவர் அறியாதவரல்ல. அவரது தெரிவு அவரது அரசியல் பார்வையால் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்த் தேசியம் சிங்கள மக்களை எதிரிகளாக் கண்டு காட்டிய போதும் அதற்கு மாறாகச் சிங்கள மக்களை நண்பர்களாக மதித்தவர் கைலாசபதி. சிங்கள எழுத்தாளர்கள், கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியவர். சினிமா நெறியாளர் தர்மசேன பத்திராஜவின் நெறியாள்கையில் "பொன்மணி' என்ற படம் எடுக்கப்பட்ட போது அதற்கு ஒத்துழைப்பு நல்கியவர்.
சிங்கள எழுத்தாளர்களுடன் இணைந்து சமூக விஞ்ஞானிகள் சங்கம் என்ற அமைப்பினூடாக "இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை' என்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரை சமர்ப்பித்தவர். கைலாசபதியின் சாதனைகளை விடவும் அவர் வகித்த பதவிகளை விடவும் முக்கியமானவை அவரது உலக நோக்கும் சமுதாயச் சார்பான தடம் புரளாத அவரது சிந்தனையுமாகும்.
தமிழ்த் தேசியத்தின் திசைமார்க்கத்தைக் கணிப்பதில் சர்வதேசத் தொழிலாளி வர்க்க சமூகத்தின் அங்கமாகவே தமிழ்ச் சமூகத்தைப் பார்த்தார் கைலாசபதி. குறுந் தமிழ்த் தேசியத்தை வெறுத்தொதுக்கி ஏகாதிபத்திய எதிர்ப்புடைய முற்போக்குத் தேசியத்தை முன்மொழிந்தார். எனவே தான் பிற்போக்குத் தமிழ்த் தேசியத்தின் போக்கையும் நோக்கையும் புறந்தள்ளி தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை "தமிழர் வியாபாரக் கூட்டணி' என்று விமர்சித்தார். தமிழர்கள் பார்க்க வேண்டிய சர்வதேசம் என்பது அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, பிரித்தானியாவோ அல்ல. மாறாக மூன்றாம் உலகமே என்று திசைகாட்டினார்.
கைலாசபதி எழுதிய காலப்பகுதியில் எமக்குத் தெரிந்த அயல் இலக்கியமாக இருந்தது ஐரோப்பிய இலக்கியங்களே. ரஷ்யப் புரட்சியின் விளைவாக ஓரளவு ரஷ்ய இலக்கியங்களை தேடிப்படிக்கும் ஆர்வம் இருந்ததேயொழிய அநேகமாக அயல்நாட்டு இலக்கியங்களாக அறியப்பட்டது ஐரோப்பிய ஆங்கில இலக்கியங்களே. உலக இலக்கியங்கள் பற்றிப் பேசும்போது ஆங்கிலத்தை விட்டால் எமக்கு வேறு வாயில் இருக்கவில்லை. இன்றும் அந்த நிலைதொடர்கின்ற போதும் ஐரோப்பாவிற்கு வெளியில் ஒரு உலகம் இருப்பது பற்றிக் கொஞ்சம் கூடுதலாகவே எமக்குத் தெரியும்.
ஒடுக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் நாம் தேடவேண்டிய ஒற்றுமைகளும் நாம் கற்க வேண்டிய பாடங்களும் ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்ட சமூகங்களிலிருந்துதான் வருகின்றன. பண்பாட்டு அடிப்படையில் பார்த்தால் தமிழ் இலக்கியங்களில் குறிக்கப்படுகின்ற நாடுகளான பாரசீகர், யௌவனர் என்று உலகம் முழுவதும் உறவுகள் நீண்டு கொண்டு போவதைக் காணலாம். ஆனால், கொலனித்துவத்திற்குப் பிறகு அந்த உறவுகளின் அக்கறையே விடுபட்டுப் போய்விட்டது. இன்றைய சூழலில் உலகத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டிய தேவை இருக்கின்றது.
தேசிய இலக்கியத்தில் சர்வதேச இலக்கியத்தின் தேவை எங்கு வருகின்றது என்று நோக்குமிடத்து தேசிய இலக்கியத்தின் சர்வதேசத் தன்மை பற்றி கைலாசபதி சொல்கிறார்;
""கொங்கோ தேசத்திலே பிறந்து வளர்ந்து ஓர் உண்மைக் கொங்கோலியனாக வாழ முயன்ற லுமும்பா உலகப் பிரஜையாக மாறிவிட்டான்.
ஆங்கில சாம்ராஜ்யத்தை இழந்தாலும் ஷேக்ஸ்பியரை இழக்க மாட்டோமென்று ஆங்கிலேயர் போற்றிப் பாராட்டும் கவிஞன் உலக மகாகவியாக எண்ணப்படுகிறான்.
தேசிய இலக்கியம் என்னும் பொருள் பற்றி சிந்திக்கும் போது எனக்கு இந்த உதாரணங்கள் நினைவிற்கு வந்தன'.
தேசியமும் சர்வதேசியமும் முரண்படுகின்ற இடம் எது என்பதும் முரண்பாட்டை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதுவும் மிகவும் முக்கியமானது.
எந்தவொரு சமூகமும் தனக்குள்ளே முடங்கி இருந்ததாகச் சொல்ல இயலாது. எந்தவொரு மொழியும் எல்லாவற்றையும் தனது சமூகத்தில் இருந்துதான் பெறவேண்டும் என்கிறபோது மொழிக்குத் தேவையான அனைத்தையும் தனது சமூகத்தில் இருந்துதான் பெறவேண்டும் என்று நினைப்பதோ மற்ற சமூகங்களிலிருந்து பெற மறுப்பதோ மொழியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. இது மொழிக்கு மட்டுமன்றி மொழியுடன் தொடர்புடைய அனைத்திற்கும் பொருந்தும்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்து மதத்தால் எல்லோரையும் ஒன்றிணைக்க முடியவில்லை. சாதி என்ற அடிப்படையில் ஒவ்வொரு மக்களைப் பிரிவுபடுத்தி வைத்திருப்பதற்கு பிரதேச அடிப்படையில் இன்னொரு பிரிவாகவும் மொழியின் அடிப்படையிலான பிளவு என்று எல்லோரும் பிரிக்கப்பட்டே வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இதனடிப்படையிலேயே எத்தனையோ விடயங்கள் வெளியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கின்றன. புதிய விடயங்களை உள்வாங்கும் போது மொழியும், இலக்கியமும் செழுமையடையும் என்னும்போது தாம் அவற்றை உள்வாங்குவதில் தயங்கவேண்டிய தேவை இல்லை.
உலகம் முழுவதும் நீதிக்கான போராட்டங்கள் நடக்கின்றன என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். இவ்வகையான போராட்டப் பரிமாறல்களுக்கு உரிய உறவுப்பாலங்கள் சினேக பூர்வமான உறவுகளையே பேணுவதன் மூலம் கட்டியெழுப்பப்பட முடியும். இன்று பலஸ்தீனத்தைப் பற்றியோ கியூபாவைப் பற்றியோ பேசும் போது அவை குறித்த புரிதல் 1960 களில் இருந்த புரிதலை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஏனெனில் நாங்களும் அதே துன்பங்களை அனுபவிக்கிறோம் என்பதனாலேயே.
இவ்விடத்தில் ஐரோப்பாவிலிருந்தோ அமெரிக்காவிலிருந்தோ வரும் விடயங்களை நிராகரிக்க வேண்டும் என்பது என் வாதம் அல்ல. எதைப் பெற்றுக்கொள்வது எதை நிராகரிப்பது என்ற தெரிவு பற்றிய தெளிவு எம்மிடையே இருக்க வேண்டும் என்பதையே நினைவூட்ட விரும்புகிறேன்.
ஈழத்துத் தேசிய இலக்கியம் இன்னும் மக்கள் இலக்கியமாக வெகுஜன மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? இதற்காகத் தொடர வேண்டியவை எவை? இவை இன்று எம்முன்னுள்ள கேள்விகள். கைலாசபதி வலியுறுத்திய பண்பாட்டுத் தளத்தில் மக்கள் இலக்கியத்தை முன்னெடுப்பது பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டும்.




பண்பாட்டு அடிப்படையில் சமய, அடிப்படையில், மொழி அடிப்படையில் எனப் பல்வேறு அடிப்படைகளில் உறவுகள் பேணப்படுகின்றன. இங்கே கவனிக்கப்பட வேண்டியதொன்று என்னவெனில், சமய அடிப்படையிலான உறவுகள், சமய நிறுவனங்களின் ஊடாக உறவுகளாக மாறும் போது அது வேறொரு தளத்திற்குப் போகின்றது. மக்கள் நலன் சார்ந்த தேவைகளுக்கான உறவுகளாக இல்லாமல் ஆதிக்கப் போக்கும் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்குமான உறவாக அது மாறி விடுகின்றது. ""சர்வதேச இஸ்லாம்' என்ற அடிப்படையில் இயங்க ஆரம்பிக்கும் போது பல சினேக சமுதாயங்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை இன்றைய நிலையில் தெளிவாகக் காணலாம். அதேபோல, ""இந்துத்துவா' என்ற அடிப்படையில் செயற்படும் போதும் சினேக சமுதாயங்களை பகைமைக் கண்ணோட்டங்களோடு பார்கின்ற ஒரு தன்மை வலுவடைகின்றது. இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படையில் மக்களைப் பலப்படுத்துகின்ற விடயங்கள் அல்ல. இவ்வாறானவற்றைக் கொண்டு வருபவர்களின் நோக்கம் மிகவும் வித்தியாசமானது. அவர்களின் தேவையும் மிகவும் வேறுபட்டது. அது மக்கள் நலன் சார்ந்தல்ல என்று மட்டும் உறுதியாகக் கொள்ள முடியும். இவர்கள் தங்கள் சமூகத்துக்குள் செலுத்தும் ஆதிக்கத்தை சமூகத்திற்கு வெளியேயும் செலுத்தும் முயற்சியே. இது இவர்கள் தங்கள் சமூகத்துக்குள்ளேயே கீழ்நிலையில் உள்ளோரை மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஒருபோதும் முயற்சிப்பதில்லை.
நாங்கள் தூய்மைவாதத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இருப்பதால் எவ்வித பலனும் இல்லை. வெளியில் இருந்து எத்தனையோ விடயங்களை நாம் உள்வாங்குகிறோம். ஒவ்வொரு சமூகங்களுக்குமிடையில் வெவ்வேறு மட்டங்களில் உறவு நீடிக்கிறது. இவ்வாறான உறவுகளை நாம் பகை முரண்பாடுகளைக் காண வேண்டிய தேவை இல்லை.
இந்த நிலையில் வெளியிலிருந்து எவ்வகையான உறவுகளை நாம் பேணவேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. ""பண்பாடு' , ""சமூக நீதி' என்ற அடிப்படையில் உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் பேணவும் வேண்டும்.
பிறநாட்டு இலக்கியங்களைப் பற்றிப் படிக்க வேண்டிய தேவையும் அறிந்திருக்க வேண்டிய தேவையும் இதனால் முக்கியத்துவம் பெறுகின்றது. ஆபிரிக்க இலக்கியங்களாட்டும் இலத்தீன் அமெரிக்க இலக்கியங்களாகட்டும் பழங்குடி இலக்கியங்களாகட்டும் இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் கற்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
பிறமொழிப் படைப்புகள் தமிழில் வருவதை எதிர்ப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறமொழியைச் சேர்ந்த சிறுகதையையோ நாவலையோ ஏன் கவிதையையோ கூட படைக்கப்பட்ட மொழியில் சொல்லப்பட்ட பெயர்களை எமது சூழலுக்குரிய பெயர்களாக மாற்றிவிட்டு பிரசுரிக்கும் போது அப்படைப்பு வேற்று மொழிப்படைப்பு என்பதை இனங்காணவே இயலாமல் போகிறது.
இது உண்மையில் உலகெங்கும் மக்கள் ஒத்ததன்மையுடைய பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் என்பதற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. பிறமொழி இலக்கியங்களை உள்வாங்கும் போது விளைகிற இன்னுமொரு பயன், ஒரு சம்பவத்தை ஒவ்வொருவரும் பார்க்கின்ற பார்வையும் வேறுபடும். ஒரு சம்பவம் எங்களுடைய பார்வைக்கு அப்பால் இன்னொரு பார்வையாக இலக்கியங்களோடு பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போது அந்தப் பார்வை எமது பார்வையிலிருந்து வேறுபட்டதாகவே இருக்கும். இவை உண்மையில் எமது பார்வைக்கோணங்கள் விரிவடைய உதவுகிறது.
சர்வதேச இலக்கியத்தின் தேவை பற்றிச் சொல்லும் போது பேராசிரியர் கைலாசபதி சொல்கிறார்;
""இன்னொரு விதத்திலும் இலக்கிய சர்வதேசியத்துவம் எமக்குத் தேவையாயுள்ளது. எள்ளிலிருந்து எண்ணெயை பிழிந்தெடுப்பதுபோல, இலக்கியங்களிலிருந்தே அவை பற்றிய இலக்கணம் வரையறை செய்யப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக வழங்கிவரும் மரபுவழிப் பாடல்களுக்கும் ஏனைய இலக்கிய வடிவங்களுக்கும் விதிகளும் விளக்கங்களும் நிறைய இருக்கின்றன. கல்வி கேள்விகளில் வல்லவராயிருந்தவர்கள் தம்மைப் போன்றவர்களுக்காகப் படைத்த இலக்கியங்கள் அவை.
ஆனால், புரட்சிகர இலக்கியம் எழுச்சி பெறும் மக்களின் இதயத்துடிப்பினை எழுத்தில் வடித்து வழிகாட்ட முற்படுவன. ஆகையால் அவற்றுக்குப் போதிய முன்மாதிரிகளும் உதாரண விளக்கங்களும் ஒரு குறிப்பிட்ட மொழியிலேயே இருத்தல் சாத்தியமல்ல. உலகின் பல மொழிகளிலும் படைக்கப்படும் மக்கள் கலை இலக்கியமெல்லாம், முற்போக்கு ஆக்கங்களெல்லாம் பொதுச் சொத்துகள். அவை பொதுவான களஞ்சியத்தில் இருப்பவை. அவை ஒன்றுக்கொன்று முன்மாதிரியாயும் வழிகாட்டியாயும் அமைந்து பரஸ்பரம் ஒன்றையொன்று தழுவிச்செல்வன. அவற்றிலிருந்துதான் முற்போக்கு இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுக்க முடியும்'.
கைலாசபதியின் விமர்சனக் கோட்பாடுகளும் நடைமுறையும் பற்றிப் பார்க்கும் போது அவர் கோட்பாடுகளை நிறுவிக் கொண்டு பின்னர் தமது நடைமுறையில் ஈடுபட்ட ஓருவரல்ல. அவர் தனது விமர்சன நடைமுறையின் ஊடாகவே தனது கோட்பாடுகளை நிறுவிக் கொண்டவர். இலக்கியக் கொள்கைகள் என்று வரும் போது "சமுதாயக்கொள்கையின்' முக்கியத்துவத்தையும் தேவைப்பாட்டையும் வலியுறுத்தியவர்.
திறனாய்வென்பது இலக்கியப் பயில்வின் இன்றியமையாத அம்சம் என்பதை வலியுறுத்திய கைலாசபதி தனது ""இலக்கியமும் திறனாய்வும்' என்னும் நூலில் ஒரு படைப்பின் உண்மையான இயல்புகளை இனங்கண்டு வாசகனுக்கு அறிமுகம் செய்வது திறனாய்வாளனின் இன்றியமையாத கடமை என்று சொல்கிறார். தமிழ் இலக்கிய விமர்சனம் விறைப்பான மரபு சார்ந்த பார்வையின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. இலக்கியத்தின் சமுதாயச் சார்பான பண்பையும் சமுதாய மாற்றத்தில் அதன் பணியையும் உணர்ந்த முற்போக்கு இலக்கியம் கைலாசபதியின் முந்தியதாக இருந்த போதும், விஞ்ஞானரீதியான விமர்சன முறையையும் இலக்கியத்தின் சமூகச் சார்பான தன்மையையும் தெளிவுபடுத்தித் தமிழில் பிரயோகித்த வரையில் கைலாசபதியின் பங்களிப்பு முன்னோடியானது.
கைலாசபதி தேசிய கலை இலக்கியப் பேரவையின் முக்கிய ஆலோகராக இருந்தார். அதை விடவும் செம்பதாகை போன்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி ஏடுகளில் ஒழுங்காக அரசியல் கட்டுரைகளும் எழுதி வந்தார். அக்கட்டுரைகளில் சில ஏற்கனவே நூல் வடிவம் பெற்றுள்ளன.
கைலாசபதி தன்னை ஒரு அரசியல்வாதியாகவோ எந்த ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினராகவோ காட்டிக் கொள்ளவில்லை.
ஆனால், அவரது எழுத்துகளும் பல்துறை சார் செயற்பாடுகளும் அவரது மார்க்ஸிய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துக் காட்டுவதாகவே அமைந்தது. அவர் எப்போதும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்திலேயே நின்றார். அவர்களது போராட்டங்களை ஆதரித்தார். சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சியின் பிளவின் போது அவர் மார்க்ஸிய லெனினிச வாதிகளின் பக்கத்திலேயே நின்றார்.
பரந்த நோக்கில் அவரது சமூகப் பார்வையும், தேசிய, சர்வதேசிய அரசியல் விவகாரங்கள் பற்றிய பார்வையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான மார்க்ஸியப் பார்வையே. தமிழ்த் தேசியம் தொடர்பில் மிகத் தெளிவான ஒரு நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார் என்பதை அவரது கட்டுரைகளின் வழி அறிய முடியும்.
எந்தவொரு கலை இலக்கியக் கோட்பாடும் அதனை முன்னெடுக்கும் கலை இலக்கிய அமைப்பும் அதன் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார வரலாற்றுச் சூழலை உள்வாங்கியே உருவாகிறது. படைப்பாளிகளும் தத்தமது நிலைக்களங்களுக்கு ஏற்பவே செயற்படுவர். வர்க்க சமூகத்தில் இலக்கிய நோக்கும் போக்கும் ஏதோ ஒரு வர்க்க அடையாளத்துடனேயே இருக்கும். இது கைலாசபதிக்கும் அவர் சார்ந்திருந்த தேசிய கலை இலக்கியப் பேரவைக்கும் பொருந்தும்.
நமது நாட்டின் சமூக அமைப்பும் அது எதிர்நோக்கி நிற்கும் அடிப்படை முரண்பாடும் யாவை? மக்கள் என்போர் யார்? மக்கள் இலக்கியத்தின் அடிப்படைகள் யாது? அவற்றை முன்னெடுக்கும் வழிவகைகள் எத்தகையன என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை கைலாசபதியின் எழுத்துகள் ஊடு அறிய முடியும். மக்கள் இலக்கியம் என்பது இறுதி ஆய்வில் மக்களின் அங்கீகாரத்தை விட மேலாக ஒன்றையும் வேண்டி நிற்பதில்லை. இதைத் தெளிவாக உரத்துச் சொன்னவர் கைலாசபதி. சொல்லக் கூடியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் இன்றைய காலத்திலும், சகல தளங்களிலும் கைலாசபதியின் கருத்துகள் வலிமையுடையனவாய் இருக்கின்றன. இளைய தலைமுறைக்கு வழிகாட்டுகின்றன.

No comments: