Monday, September 27, 2010

படைப்பிலக்கியத்திற் கொள்கையும் நடைமுறையும் – க. கைலாசபதி

எண்ணற்ற வடிவங்களிலும் உருவங்களிலும் ஆராய்ச்சிக்கு விரோதமான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக எமது இலக்கிய உலகிலே தனியாட்சி செய்து வந்திருக்கின்றன. இவற்றை அறவே அகற்றிப் புறநிலை உலகத்தின் விதிகளுடன் இசைவுடைய கருத்துக்களை வளர்த்தல் வேண்டும். இவ்வாறு வளர்த்தல் செயலாதலின், செய்கை இன்றியமையாததாகிறது. விஷயங்களின் அடிமுடி தேடிப் பெறும் அறிவு கேவலம் ‘ஞான’மாக மட்டுமன்றி ‘உலகினை மாற்றவும்’ ஊக்கத்துடன் உதவ வேண்டும். அது மட்டுமல்ல. நாம் ஆர்வத்துடன் தேடிக்கொள்ளும் அறிவு சரியானதா அன்றித் தவறானதா என்பதை நிச்சயிக்கவும் நடைமுறையே தலை சிறந்த மார்க்கமாகும். ஏனெனில் சமுதாய நடைமுறையில் பிரயோகிக்கும் போது எவை வெற்றி பெறுகின்றனவோ அவை சரியானவை என்று பொதுவாகக் கூறலாம். எவை தோல்வியடைகின்றனவோ அவை தவறானவை என்பதிலும் தப்பில்லை. இயற்கையை எதிர்த்துப் போராடி அதனை வென்றடக்குவதிலேயே இது சிறப்பாகப் பொருந்துவதாயினும் சமுதாய இயக்கங்கட்கும் ஏற்புடையதே.

ஆனால் இயற்கையுடன் நடத்தும் போராட்டத்திலும் சரி, அல்லது சமுதாயப் போராட்டத்திலும் சரி, இவ்வளவுகோல் யாந்திரீக மயமாய்ப் பரீட்சித்துப் பார்க்கக் கூடியதொன்றன்று. ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களும் வெற்றி பெறுவதில்லை. தோல்வியும் அடைகின்றன. ஆனால் அது உள்ளார்ந்த குறைபாட்டினால் அன்று. புறக் காரணங்களினாலாகும். ஆயினும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டுச் சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன. இவ் வளர்ச்சி முறையைச் சுருள்வட்டத்துக்கு ஒப்புமை கூறுவர் சிலர். விஞ்ஞானக் கருத்துக்களில் தோய்ந்து நவ கவிதைகள் பல பாடியுள்ள முருகையன் இப் பொருளையே அடியும் முடியும் என்ற கவிதையிற் பாடுகிறார். நீண்ட அப் பாடலிற் சில பகுதிகளை மாத்திரம் இங்கே காட்டுவோம்.

இக்காலத் தியல் கொண்டு கணக்குப் போட்டோம்
ஏதிர்காலப் போக்குகளை முன் அறிந்தோம்
முற்கால மர்மத்தை ஒதுக்கி நீக்கி
முன்னேற லானோம் நாம்–முடிவில்லாமல்
அப்பாலும் அப்பாலும் நெடிது செல்ல
அதற்கப்பால்—அதற்கப்பால் திகைத்து நின்றோம்.
நிற்காமல் மிக மெதுவாய்ப் பின்னும் செல்வோம்
நிகழ்ச்சிகளின் திருவடியைக் காண எண்ணி.
எதிர்காலப் போக்குகளை அறிதலன்றி
இயன்றவரை அதை மாற்றும் போராட்டத்தும்
விதவிதமாய் முயலுகிறோம். விரும்பத்தக்க
விளைவுகளும் பெறுகின்றோம்….

எட்டும் இனி என நினைத்தோம்; ஐந்தடிக்குள்
இருக்கும் என்று சென்றாலோ… இன்னும் சற்று
மட்டும் ஒரு சிறிது செலின், கைகளுக்குள்
வசப்படுதல் நிசம் என்று நிச்சயித்தோம்.
கிட்டுவது போல் இருந்து கிட்டாதாகி
கிடையாத தோற்றரவோ என ஐயற்று
நெட்டுயிர்த்தோம். ஆனாலும் மீண்டும் மீண்டும்
நிமிர்ந்தெழுந்து மறுபடியும் நகரலானோம்.

நீந்தப் பழகுவதற்குத் தண்ணீரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. நீச்சல் அறிவு முழவதும் நேரடி அனுபவத்திலிருந்தே உண்டாகிறது. ஆனால் பல சமயங்களில் ’இயலாது’ ‘முடியாது’ என்ற ஐயறவுகளெல்லாம் தோன்றுவது இயற்கை. விடாப்பிடியாகத் தொடர்ந்து முயல்வதே இறுதி வெற்றிக்கு வழி. அயல்நாட்டுப் பழமொழியொன்று கூறுவது போல ‘தோல்வி என்பது வெற்றியின் தாய். இடறி விழுதல் அறிவில் எழுதல்’ என்பதாகும்.

புறநிலை உலகத்தைப் பார்த்து அதன் பண்புகள் சிலவற்றை வருணித்தால் மட்டும் போதாது என மேலே காட்டினோம். ‘சுத்த இலக்கியவாதிகள்’ சிலர் தாம் நவீன உலகைக் கண்டவாறே வருணிப்பதாகக் கூறுவர். அதாவது எழுத்தாளனது ‘அரசியல்’ ‘பொருளியல்’ கருத்துக்களின் தலையீடு இன்றி ‘புறநிலை’ உலகை நேர்மையுடன் படைப்பதாகப் பெருமைப்படுவர். ஆனால் அவ்வாறு கூறுவதே ஒருவகையான அரசியற் கண்ணோட்டந் தானே. ஆண்மையில் இந்திரா பார்த்தசாரதி எழுதிய தந்திரபூமி புறவுலகைப் புரிந்துகொள்ள மாட்டாத ‘சுதந்திர’ எழுத்தாளரது பிரலாபமாகவே முடிந்தது. மற்றோர்களைப் பார்க்கச் சிறந்த முறையில் உலகின் இயல்பை உணர்ந்து, தனது துன்பத்துக்கும் தன் போன்ற பிறரது துன்பங்களுக்;கும் நிவாரணங் காணக்கூடிய கஸ்தூரி நடைமுறைக்கும் ‘ஆன்மீக’த் தத்துவங்களிற் சரண் புகுவது பமைய பிரமஞானம். இன்றும் எத்துணை வலிமையுடையதாய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தந்திரபூமியை சி.பி. சினோ எழுதிய Corridors of Power என்ற ஆங்கில நாவலோடு ஒப்புநோக்கினால் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு பல விஷயங்களைத் தெளிவுபடுத்துவதாயிருக்கும். அதிலும் பாலியல் வருகிறது. ஆனால் ஆன்மீகப் பாத்திரங்கள் புகலிடம் தேடும் போலி முடிவுகள் அதிற் காணப்படா. இந்திரா பார்த்தசாரதியின் பாஷையிற் சினோவின் இந் நாவலுக்குப் பெயரிடுவதானால் அதிகாரபூமி என்று சொல்லிக் கொள்ளலாம். அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் உள்ள பிணைப்பை ‘உள்ளிருந்து’ உயிர்த் துடிப்புடன் சித்தரிக்கிறார் ஆசிரியர் சினோ. ஆங்கே தத்துவ விசாரத்துக்கு இடமேயில்லை. Mechanics of Power எனப்படும் அதிகாரத்தின் இயக்கப்பாடுகளை இயன்றவரை புறநிலை உண்மையாகக் கொண்டு பாத்திரங்களைப் படைத்துள்ளார். ஆனால் பார்த்தசாரதியோ தந்திரபூமியில் நசிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் ஒரு ஆய்வறிவாளனையே உருவாக்கியுள்ளார். இது சமுதாயத்தின் பிரதான முரண்பாட்டையும் இயக்கப்பாடுகளையும் தவறாகப் புரிந்து கொண்டது மட்டுமன்றி, புறநிலை உண்மை மறுப்புமாகும்.
எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும் இயக்கத்தில் ஏதோ ஒரு வகையிற் பங்கு கொண்டாலன்றி, இன்றைய காலகட்டத்தில் புறநிலைக்குப் பிசகாத நாவலைப் படைக்க இயலும் என நான் நம்பவில்லை. அதையே தந்திரபூமி சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழர் சமுதாயத்திற் காணும் பல விஷயங்களின் அடிமுடியைத் தேடிக் காண வேண்டும் என்ற அவா பல இளைஞரிடத்தே காணப்படுகிறது. இது வெறும் கருத்தாக மட்டுமல்லாது செயலோடு இணைந்ததாகவும் காணப்படுகிறது. குலோத்துங்கன் என்ற கவிஞர் அண்மையில் எழுதிய ஒரு கவிதையில் இதைக் காணலாம்.

அறிவன்றி ஒளியெதுவும் அறியோம்; இன்றெம்
ஆய்வுக்குள் அடங்காத புதிர்கள் யாவும்
தெரிகின்ற நெறி காண்போம்; உண்மை தேடித்
திசையெங்கும் அலைபவர் நாம்; திறந்த நெஞ்சர்,
விரிகின்ற கொள்கையினர்; மாற்றம் இல்லா
விதியெதையும் எக்காலும் ஒப்போம்; சாலச்
சிறிதென்ற அணுவொன்றில் பார் புரக்கும்
செல்வமெலாம் காண்கின்ற திறத்தவர் யாம்
எண்ணுவதும் படைப்பதும் எம் பணிகள் யாங்கும்
எல்லோர்க்கும் சமவாய்ப்பு நிறைந்த தான
மண்ணுலகைச் சமைப்பதும் எம் குறிக்கோள்; நாளை
வருகின்ற தலைமுறையின் வாழ்வுக்காக
உண்ணுவதும் உறங்குவதும் தவிர்ந்தும், கூடி
உழைப்பதுமே யாம் மகிழும் இன்பம்; மற்றும்
விண்ணுலகம் உண்டெனினும் விழைவோமில்லை
மீளாத நரகெனினும் பயந்தோ மில்லை!

‘நாமார்க்குங் குடியல்லோம்’ என்ற அப்பரின் குரலையும் ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ எனத் தொடங்கிப் பாடிய இளம்வழுதியின் குரலையும் நினைவூட்டும் இப் பாடல், கொள்கையும் செயலும் (theory and practice) இணைய வேண்டும் என்பதனை எடுத்துரைக்கிறது.
அவ்வாறு கொள்கையும் நடைமுறையும் இணைந்தாலன்றிப் பன்னெடுங்காலமாக நிலைத்துள்ள அரசியல் பொருளாதார அமைப்பையும் அதிலிருந்து பிரிக்க முடியாத பண்பாட்டையும் ஒதுக்கி அப்புறப்படுத்த இயலாது. தூய சிந்தனை, சுத்த இலக்கியம் என்பன போன்ற குரல்கள் பழைய பொருளாதாரத்தையும் அரசியலையும் பண்பாட்டையும் அடிக்கல்லாகக் கொண்டவை. எனவே புதிய அமைப்பிலேயே புதிய பண்பாடும் இலக்கியமும் தோன்ற முடியும். அதைத் தோற்றுவிப்பதற்கான பணிக்கு அறிவாராய்ச்சியும் அதற்கு இன்றியமையாத அடிமுடி தேடலும் ஊக்கத்துடன் பயன்பட வேண்டும்.
(“அடியும் முடியும்” நூலிலிருந்து அதே தலைப்பிலான கட்டுரையின் ஒரு பகுதி நன்றியுடன்

No comments: