Monday, August 4, 2008

பேராசிரியர் க.கைலாசபதி

பேராசிரியர் க.கைலாசபதிக.கைலாசபதி (ஏப்ரல் 5 1933 - டிசம்பர் 6 1982) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர்.வாழ்க்கைக் குறிப்புஇவர் 1933 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அக்காலத்தில் மலேயா என்று அழைக்கப்பட்ட இன்றைய மலேஷியாவின் தலைநகரமான கோலாலம்பூரில் பிறந்தார். சிறுபராயத்திலேயே யாழ்ப்பாணம் வந்த இவர் வண்ணார்பண்ணையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். இவரது தாய் மாமனும் தமிழறிஞரும் அரசாங்க அதிகாரியுமான மாணிக்க இடைக்காடர் என்பவருடைய கவனிப்பில் இவருக்குத் தமிழில் ஆர்வம் ஏற்பட்டது. கொழும்பு சென்று அங்கே றோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்து பல்கலைக் கழகம் புகுந்தார்.இலங்கையின் கண்டி நகருக்கு அருகிலுள்ள பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுப் பட்டம் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் வி. செல்வநாயகம் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.தொழில்பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து "Tamil Heroic Poetry " என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.இலக்கியப் பணிஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர் அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.இவரது ஆக்கங்கள்இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள் தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி சமயம் பண்பாடு சமுதாயம் அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல் "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்" "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்" "தமிழ் நாவல் இலக்கியம்" "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.மிக இளம் வயதிலேயே மாணவர்கள் அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர் 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.இவரது நூல்கள்அடியும் முடியும் பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும் தமிழ் நாவல் இலக்கியம் இலக்கியச் சிந்தனைகள்தமிழ் தமிழர் பற்றிய வரலாற்று ஆய்வுக்குப் பல்துறைச் சங்கம் ஆய்வு முதன்மை பெற்று வரும் காலம் இக் காலம். தமிழ் பற்றிய ஆழமானதும் அகலமானதுமான அறிவும் ஆய்வும் துவக்கம் பெற்றுத் தமிழாய்வு என்பது தமிழியல் ஆய்வாக விரிவடைந்துள்ளது. ஆக, தமிழியல் ஆய்வு என்பது வெறும் இலக்கிய ஆய்வாக மட்டும் அல்லாமல் தமிழில் வெளிப்படும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த விரிந்த ஆழமான தளத்தில் தமிழியல் ஆய்வு புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு தமிழியல் ஆய்வு ஆழ அகலப்பட்டு, அறிவு நிறுவப்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சியாக நடந்த அரை நூற்றாண்டுகளில் இருந்து முனைப்புற்று புதிய தடங்களை ஏற்படுத்தி வளர்ந்து வருகின்றன. பல்வேறு கோட்பாடு சார்ந்த கருத்து நிலை நின்ற ஆய்வுப் பாரம்பரியம் வளர்ச்சியுறுகின்றன. தமிழில் மார்க்சியக் கருத்து நிலை நின்ற ஆய்வுப் பாரம்பரியம் தமிழில் அறிமுகமாகி ஆழ அகலமான புலமைத் தொழிற்பாடுகள் முன்னரை விட அதிகரித்தன. விமர்சனப் பயிர்வும் விமரிசன செயற்பாட்டு முறைமையியலும் வளர்ச்சியுறச் செய்து ஆராய்ச்சிப் பணி புரியும் புலமையாளர்கள் பலர் தோன்றினர். இவர்களுள் தனித்துவ ஆய்வுச் சுவடு பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி. இதுவரையிலான தமிழியல் ஆய்வு வளர்ச்சியில் வரலாற்றில் புலமையாளர்கள் சிலருடைய பாத்திரம், செயற்பாடுகள் முக்கியமானவை. ஆக இவர்களைத் தவிர்த்துப் புறக்கணித்து ஆய்வியல் வரலாறு எழுதப் பட முடியாது. அத்தகையதொரு வரலாற்றுக்குள் வருபவரே பேராசிரியர் கைலாசபதி. இன்று தமிழில் இலக்கிய வரலாற்று ஆய்வியல் வரலாற்று வளர்ச்சியைக் கோடிட்டுக் காட்ட முனையும் பொழுது இதுவரை அவ் விடயங்கள் சம்பந்தமாக எழுதப் பெற்ற நூல்கள் பற்றிய ஒரு விரிவான புரிதலுக்கும் அறிதலுக்கும் விவரத்தினைத் தருவதற்கு முயலுதல் வேண்டும். ஆனால், தமிழ் மொழியில் வெளி வந்துள்ள நூல்கள் யாவற்றையும் உள்ளடக்கிய விரிவான நூற்பட்டியல் எதுவும் தமிழில் இல்லையென்றே கூறலாம். சிலரால் சில முயற்சிகள் ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்டாலும் அவை கூட பூரணப்படுத்தப் படாமலேயே உள்ளன. இன்னொரு விதத்தில் தமிழியல் ஆய்வு மேலும் சிறக்க, விரிவடைய, ஆழப்படுத்த முன்னைய நூல்கள் பல மீண்டும் மீள் பதிப்புச் செய்யப்பட வேண்டும். இன்றைய அறிவு வளர்ச்சி, ஆய்வுத் தேவைகளில் பெருக்கம், மேலும் மேலும் பல்வேறு துறைகள் சார்ந்தவற்றை மீள் நோக்கி மறுவாசிப்புக்கு உள்ளாக்கும். இவற்றுக்கு முந்தைய நூல்கள் ...... பல புதிய செய்திகள், பார்வைகள், வெளிச்சங்கள் ..... பல்வேறு புதிய பிரச்சினைகளும் கிளப்பப்படும். ஆக தமிழியல் ஆய்வு விரிவுபடும். இப் பகைப் புலத்தில் வைத்தே கைலாசபதி புரிந்து கொள்ளப்பட வேண்டும். கைலாசபதி பல்கலைக்கழகப் பேராசிரியராகத் திகழ்ந்ததோடு முற்போக்கு இயக்கச் செயல்பாடுகளுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். 1950 களின் நடுப்பகுதியிலிருந்து 1982 ல் இறக்கும் வரை தீவிரமாகப் புலமைத் தளத்தில் செயலாற்றி வந்தவர். ஈழத்தில் இருந்து கொண்டே தமிழகச் சிந்தனை ஆய்வு புலமைத் தாக்கங்களில் மிகுந்த தாக்கம் செலுத்தியவர். கைலாசபதியின் ஆக்கங்கள் என்ற வகையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நூல் வடிவம் பெற்றவை 20. இவற்றுள் இரு நூல்களுக்கு இணையாசிரியர். தமிழ்ச் சூழலில் கைலாசபதியின் நூல்கள் 60, 70 களில் இளந் தலைமுறையினர் மட்டத்தில் அதிக தாக்கம் செலுத்தின. தமிழர் வாழ்வும் வழிபாடும் (1966) தமிழ் நாவல் இலக்கியம் (1968), ஒப்பியல் இலக்கியம் (1969) ஆகிய நூல்கள் குறிப்பிடத் தக்கன. இன்று மேற்குறித்த நூல்களுக்கான மீள் பதிப்புகள் 1999 இல் வெளி வந்துள்ளன. இந் நூல்கள் மீளவும் மின் பதிப்புப் பெறுவதனால் தமிழியல் ஆய்வில் ஈடுபாடு கொண்டோருக்கு இது மகிழ்ச்சிக்குரிய விடயமே. இந் நூற்றாண்டின் முடிவுறும் தருவாயில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமக்கு இந்த நூற்றாண்டின் தமிழியல் ஆய்வு வரலாறு, வளர்ச்சி பற்றி உரத்துச் சிந்திக்கும் பொழுது கைலாசபதியைத் தவிர்த்துச் சிந்திக்க முடியாது. மேற்குறித்த நூல்களின் வருகை எமக்குப் புதிய பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பக் கூடும். பல்வேறு உரையாடல்களை எம்மிடையே ஏற்படுத்தும். இதுகாறுமான எமது வரலாற்றுக்குள் கொண்டு வரப்படாத புறக்கணிக்கப்பட்ட பகுதிகளும் உண்டு என்பதை இன்றைய எமது வாசிப்பு ஆய்வு எமக்கு உணர்த்தியுள்ளன. ஆக இதுவரையிலான ஆய்வுப் போக்குகள் குறித்த அக்கறை, தேடல் அவசியம். இவற்றுள் கைலாசபதியின் நூல்கள் மீளப் பதிப்பித்தல் எனும் செயற்பாடு ஆய்வியல் செயற்பாட்டின் ஓர் இணையாகவே பார்க்கப் பட வேண்டும். புரிந்து கொள்ளப் பட வேண்டும். 'தமிழியல் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி' எனும் நூலைக் கலாநிதி நா. சுப்பிரமணியன் எழுதி 1999 ல் வெளியிட்டுள்ளார். இது தமிழியல் ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் கைலாசபதியின் விகிபாகம் பற்றிய சிரத்தையை ஆய்வு நிலை நோக்கில் வெளிப்படுத்தும் முயற்சியாக இந் நூல் அமைந்துள்ளது. ஆக, கைலாசபதியின் மூன்று நூல்களின் மீள் பதிப்பு, கைலாசபதி பற்றிய சுப்பிரமணியத்தின் நூல் ஆகியவற்றின் வருகை கலாநிதி கைலாசபதி பற்றிய பார்வைக்கும் தெளிவுக்கும் உதவுபவையாக உள்ளன. தமிழியலாளர்கள் −வற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழியல் ஆய்வு மேலும் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும். கைலாசபதி நூல்கள் ஒப்பியல் இலக்கியம் 246 பக்கங்கள் விலை ரூ. 65 தமிழ் நாவல் இலக்கியம்(திறனாய்வுக் கட்டுரைகள்) 278 பக்கங்கள் விலை ரூ. 70 பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும் 175 பக்கங்கள் விலை ரூ. 48 வெளியீடுகுமரன் பப்ளிஷர்ஸ்3, மெய்கை விநாயகர் தெருகுமரன் காலனி 7 வது தெருவடபழனிசென்னை - 600 026. கலாநிதி நா. சுப்பிரமணியன் தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி 123 பக்கங்கள் விலை ரூ. 50 வெளியீடுசவுத் விஷன்6, தாயார் சாகிப் 2 வது சந்துசென்னை - 600 002.- தெ. மதுசூதனன்.

No comments: