Wednesday, December 24, 2008

தமிழரிடையே மொழி, பண்பாடு பற்றிய உணர்வு-பேராசிரியர்.க.கைலாசபதி

"யாழ்ப்பாணத்து அறிஞர்கள்', தமது பிரசங்கம், கற்பித்தல், விவாதம், பதிப்பு, நூல் வெளியீடு போன்றவற்றால் தம்மை, தமிழ் நாட்டில் நிலைநிறுத்திக்கொண்ட அதேசமயம், அவர்கள் அங்கு நடந்துகொண்டிருந்த கலாசார தேசிய இயக்கத்தால் கவரவும்பட்டனர்.கோல்ட்வெல் பாதிரியாரின் (18141891)திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856, திருத்திய பதிப்பு 1958) என்னும் நூலால் நாவலர் பாதிப்புற்றவராகக் காணப்படாவிடினும் தாமோதரம்பிள்ளையும் ஏனையோரும் அந்நூலின் பாதிப்புக்கு உட்பட்டவராகக் காணப்படுகின்றனர். நான் இது பற்றி வேறொரிடத்தில் ஆராய்ந்துள்ளதால் இவ்விடத்தில் அதிகம் கூறத்தேவையில்லை. சமஸ்கிருதம், இந்தோ ஆரியமொழிகள், திராவிடமொழிகள் ஆகியவற்றின் எதிரெதிரான தனித்தன்மைகளையும் அம்மொழிகளின் பழமையையும் பற்றிக்கோல்ட்வெல் கூறுகிறார். இதன் மூலம் றொபட் கோல்ட்வெல்ட் ஏற்படுத்திய கருத்தோட்டங்கள், இயக்கங்கள் ஆகியவற்றின் பின்விளைவுகள் மொழியியற்துறைக்கு அப்பாற்பட்டவையாக அமைந்தன.

தமிழ் மொழியின் பொற்காலம் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் கோல்ட்வெல் மாத்திரம் தனியே ஈடுபடவில்லை, வேறு ஐரோப்பிய மிஷனரிகளும் திராவிடம்பற்றிய கருத்துகளை முன்வைத்தனர். ஆனால் கொல்ட்வெல்வின் ஒப்பிலக்கணமே இக்கருத்தை மேலும் மேலும் வலுப்படுத்தியது. சி,வை.தாமோதரம்பிள்ளை தாம் பதிப்பித்த கலித்தொகை (1887) வீரசோழியம் (1895) போன்ற பழந்தமிழ் நூல்களுக்கு எழுதிய நீண்டவையும் வாதப்பிரதிவாதங்களுக்கு உட்பட்டவையுமான பதிப்புரைகளில் கோல்ட்வெல்லின் திராவிடம், தமிழ் பற்றிய உறுதியான கருத்துகளை எதிரொலிக்கிறார்.பண்டைய தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மாத்திரமன்றி, அவற்றின் ஊடகமான தமிழ் மொழியும் நன்மதிப்புக்கு உட்பட்டது. "தமிழரின்' நவீன மொழி உணர்வினை இக்காலப்பகுதியிலிருந்து காணமுடியும். இவ்வியக்கத்தின் போஷகர் ஒரு கிறிஸ்தவ மிஷனரியாகவிருந்தது ஒரு முரண்சுவை ஆகும்.

தென்னிந்தியாவிலும், தமிழ் நாட்டிலும் 1880 களில் வாழ்ந்த தமிழ் உயர் குழாத்தினர் தமது மொழி, பண்பாடு, வரலாறு பற்றிமிகவும் ஆர்வமுடையோராய் இருந்தனர், திருவங்கூர் பல்கலைக்கழகக் கல்லூரியில் தத்துவாப் பேராசிரியராகவிருந்த வி.சுந்தரம்பிள்ளையின் செய்யுள் நாடகமான மனோன்மணியம் (1891) இவ்வார்வத்தைக் குறிக்கும் ஒரு மைல்கல்லாகும். பெரிதும் புகழப்படும் இந் நாடக இலக்கியத்தில் ஆசிரியர் தமிழ் மொழியைத் தேவதையாக உருவாக்கினார். தமிழ் மொழி தெய்வத்தன்மை பொருத்தியதாகவும், புனிதமானதாகவும் கூறப்படுகின்றது. தென்னிந்தியாவில் ஏற்பட்ட இத்தகைய கருத்தோட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் இலங்கைத் தமிழரின் முழுமையான பங்குபற்றலும், பங்களிப்பும் காணப்பட்டன. மொழி, பண்பாடுபற்றி வளர்ந்து வந்த விழிப்புணர்வின் குறியீடுகளாக இரு சஞ்சிகைகள் வெளிவரத் தொடங்கின. ஒன்று சித்தாந்த தீபிகை (18971914) மற்றையது தமிழியன் அன்றிகுவரி (Tamailin Antiquary 1907&1914) இவ்விரு சஞ்சிகைகள் பற்றி சமகால ஆராய்ச்சியாளர் ஒருவரின் அவதானிப்பு விடயத்தைத் தெளிவுபடுத்துகிறது.

"தமிழ் மறுமலர்ச்சியின் மகோன்னத காலப் பகுதியான இரு தசாப்தங்களை இவ்விரு சஞ்சிகைகளும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.ஐரோப்பிய அறிஞர்களின் நுண்திறத்தாலும் உணர்ச்சியார்வத்தாலும் வழிநடத்தப்பெற்ற தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் மொழியிலும் வளர்த்துக்கொண்ட ஆர்வத்தை இக்காலப்பகுதி குறிக்கிறது.இவ்விரு சஞ்சிகைகளும் தமிழரிடையே அவர்களது மொழியிலும் இலக்கியத்திலும் அக்கறையையும் இலக்கிய பண்பாட்டுப் பாரம்பரியத்தில் சமூக நம்பிக்கை உணர்வையும் ஏற்படுத்தியதில் மிகப் பெரும் பங்காற்றின.'

இங்கு நாம் கவனிக்கவேண்டிய விடயம் யாதெனில், ஈழத்துத் தமிழறிஞர் இவ்விரு சஞ்சிகைகளின் வெளியீட்டில் தீவிரமாகப் பங்குபற்றியமையாகும். சித்தாந்த தீபிகைக்கு ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளையும் (18641920) தமிழியன் அன்ரிக்குவரிக்கு டி.சவரிராயப்பிள்ளையும் (18541923) ஆசிரியராக இருந்தனர். முன்னையவர் மாவட்ட நீதிபதி, மற்றவர் திருச்சியில் சென்.ஜோசப் கல்லூரியில் விரிவுரையாளராகவிருந்தவர். இச்சஞ்சிகைகளை மேலோட்டமாகத் தன்னும் பார்க்கும்போது இலங்கைத் தமிழரின் பங்களிப்பின் இயல்பையும் அளவையும் கண்டுணரமுடியும். பொன்.அருணாசலம், பொன். இராமநாதன், எஸ்.டபிள்யூ.குமாரசாமி(18751936), அ.முத்துதம்பிப்பிள்ளை (18581917), வி.ஜே.தம்பிப்பிள்ளை, ரி.பொன்னம்பலப்பிள்ளை போன்றோரும் வேறு சிலரும் இச் சஞ்சிகைகளுக்கு தொடர்ந்து எழுதிவந்தனர். பி.ஏ.என்ற முதலெழுத்துக்களுடன் பொன்.அருணாசலத்தின் மொழிபெயர்ப்புகள் இச் சஞ்சிகைகளில் வெளியாகின. நல்லசாமிப்பிள்ளை நாவலரின் அபிமானி;இலங்கைத் தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சிகளை அருமையுடன் பாராட்டியவர், பண்டிதர் சவரிராயப்பிள்ளை தமிழ் நாட்டில் முக்கியமான பதவிகள் வகித்த இரு யாழ்ப்பாணத்தவரால் தூண்டப்பட்டவர். ஒருவர் திருவாங்கூர் ஆயத்துறை அத்தியட்சகராகவிருந்த தா.பொன்னம்பலபிள்ளை மற்றவர் இவரது சகோதரர் தா.செல்லப்பாபிள்ளை திருவாங்கூரில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். தா.பொ.மாசிலாமணிப்பிள்ளை பொன்னம்பலபிள்ளையின் புதல்வர். இவரும் தமிழியன் அன்ரிகுவரிக்கு கட்டுரைகள் எழுதினார். வேலையிலிருந்து இளைப்பாறி இலங்கைக்குத் திரும்பியபின் செல்லப்பாபிள்ளை சைவபரிபாலனசபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பண்டிதர் சவரிராயர் பற்றிய செய்தி எமக்கு இன்னோர் உண்மையை உணர்த்துகிறது. பண்பாட்டு விழிப்புணர்வு , இந்து இயக்கமாகவே தொடங்கி சைவ அறிஞர்களால் முன்னெடுத்துச்செல்லப்பட்டாலும் அதனுடைய குணாம்சம் பின்வந்த ஆண்டுகளில் மாற்றமடைந்தது.கிறிஸ்தவ மிஷனரி அறிஞர்களும் (கோல்ட்வெல், பேர்சிவல், பவர், போப், எல்லிஸ்) சவரிராயர் போன்றோரும், கிறிஸ்தவர்களும் இவ்வியக்கத்தில் இணைந்தனர். மேலும் சமயத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சமயத்திலிருந்து மொழிக்கு மாறியமையால் இதுவரை சைவசமயத்திற்கு இருந்த முதன்மையும் குறைந்தது (உண்மையில் சவரிராயப்பிள்ளையின் காலத்திலிருந்து இலங்கையிலும் இந்தியாவிலும் எல்.டி.சுவாமிக்கண்ணுபிள்ளை (18651925)ஞானப்பிரகாச சுவாமிகள் (18751947) டாக்டர் ரி.ஐசக் தம்பையா, சேவியர் தனிதாயக அடிகள் ஆகியோரின் தீவிர பங்களிப்பு தமிழ் பண்பாட்டு இயக்கத்தில் கிறிஸ்தவர் ஊடுருவிவிட்டனர் என்ற குற்றச்சாட்டு சில சமயம் எழுவதற்கு வழிவகுத்தது.

மேற்கூறப்பட்ட நிகழ்ச்சிகள் இலங்கையில் ஐயத்துக்கிடமின்றிப் பல தாக்கங்களை ஏற்படுத்தின. தமிழ் மொழியில் இருந்த அக்கறை பல்வேறு வழிகளிலும் வெளிப்பட்டன. மொழிப்பாதுகாப்பையும் வளர்ச்சியையும் கருதிச் சங்கங்களும் சபைகளும் அமைக்கப்பட்டன. 1898 ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரின் மருமகரும் மாணாக்கருமாகிய த.கைலாசப்பிள்ளையால் (18821939) யாழ்ப்பாணத்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டது, இதனாற் கவரப்பட்டே ராமநாத மாவட்ட பழவனந்தம் ஜமீந்தார் பாண்டித்துரைதேவரால் (18671911) 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது என்னும் செய்தி சுவைப்பதாகும்.இப்போக்கு அடுத்த சில தசாப்தங்களில் பிரபல்யமடைந்தது. 1942 ஆம் ஆண்டு கொழும்புத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது, தமிழ் மொழி,இலக்கியம் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான மகாநாடுகளும் கூட்டங்களும் அடிக்கடி நடைபெற்றன. அத்தகைய ஒரு கூட்டம் யாழ்ப்பாணத்தில் 1922 இல் ரிட்ஜ்வே மண்டபத்தில் செ.கனகசபைப்பிள்ளையின் தலைமையில் நடைபெற்றது. இதுவே யாழ்ப்பாணத்தில் நடந்த முதலாவது பெரிய இலக்கிய மகாநாடாகும். இம் மகாநாட்டுக்காக சென்னையிலிருந்து சில பிரமுகர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கலாநிதி எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார், கா.சுப்பிரமணியப்பிள்ளை (18891945) தமிழ் மறு

மலர்ச்சியாளர் பி.வி.மாணிக்க நாயக்கர், (18711931) நாவலாசிரியர். அ.மாதவையா (18721925) போன்றோர். சேர். வைத்திலிங்கம் துரைசாமி இரண்டாம் நாள் மகாநாட்டுக்குத் தலைமைவகித்தார். மகாஜனாக் கல்லூரியின் ஸ்தாபகரும் புலவரும், நாடகாசிரியருமான தெ.அ.துரையப்பாப்பிள்ளை இம் மகாநாட்டில் தீவிரபங்கெடுத்தார். இதே வருடத்திலே யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமும் தொடங்கப்பட்டது.

தமிழ் மொழியின் வளர்ச்சியைப் போன்ற சமாந்தரப் போக்கு தமிழரின் தேசிய சமய தத்துவமாகக் கொள்ளப்பட்ட சைவசித்தாந்தத்திலும் காணப்பட்டது. சைவசித்தாந்தம் நாவலரால் புனர்நிர்மாணம் பெற்றதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமயத்தை ஆதரிக்கும் பல்வேறு சபைகளும் தோன்றின. யாழ்ப்பாண சைவபரிபாலன சபைபற்றி ஏற்கனவே கூறப்பட்டது. 1905 ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் சைவ சித்தாந்த சமாஜம் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இது காலவரை சைவமடாலயங்களே சைவசமயம் தத்துவம் ஆகியவற்றுக்குப் பாதுகாவல்களாக விளங்கின. ஆனால், தற்போது சாமான்ய மனிதர்களும் சமயத்தைப் பாதுகாப்பதை தமது கட்டாய கடமை என எண்ணினர். சைவசித்தாந்தத்தின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் ஒரேஒரு முக்கிய ஸ்தாபனமாகவும் சமாஜம் கருதப்பட்டது. இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய அறிஞர்கள் அதில் பிரதான பங்கு வகித்தனர். பல தமிழறிஞர்கள் சமாஜத்தில் விரிவுரையாற்றுவதற்கு அடிக்கடி அழைக்கப்பட்டனர். அதன் வருடாந்தக் கூட்டங்களுக்கும் தலைமைவகித்தனர். ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை இச்சமாஜத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராயிருந்தார்.

பண்பாட்டு விழிப்புணர்வு, மத்தியத்தர வர்க்கத் தமிழருடையது என்பதும் இதற்குத் தலைமை தாங்கியது உயர்மத்தியதர வர்க்கத்தினரே என்பது தெரியவரும். சமயத்துறையில் ஏற்பட்ட இவ்விழிப்பு பின்னர் மொழி பண்பாட்டுத்துறைகளுக்கும் பரவியது. அடிப்படையில் இது காலனித்துவ ஆதிக்கத்துக்கெதிரான கலாசார தன்னுறுதிப்பாடாகும். இக் கலாசார விழிப்புணர்வு, மத்தியதர வர்க்கத்து இலட்சியங்களினதும் விழுமியங்களினதும் அணைசுவராகவும் அவ்வகுப்புக்குத் தேவையான தலைமைத்துவத்துக்கு உரிய படிமத்தைக் கொடுப்பதாகவும் அமைந்திருந்தது. மேலும் தெளிவாகக் கூறுவதானால் இக்கலாசார நடவடிக்கைகள் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கியிருந்தன. இன்று பின்னோக்கிப் பார்க்கும்போது பழைய சமூகத்தில் நிலைப்பேறுற்ற அமைப்பின் பகுதியாகவிருந்த தமிழ் பண்பாட்டின் சில அம்சங்களையே மத்தியதரவர்க்கம் புனரமைத்தது என்பதை உணரமுடியும். நடைமுறைத் தேவைகளுக்கு ஒவ்வாதபோதும் (சேர்.பொன்னம்பலம் இராமநாதனும் அவருடைய மருமகனும் அரசியல் வாரிசுமாகிய எஸ்.நடேசனும் செந்தமிழிற் பேசும் பாணியைக் கையாண்டபோதும்) மொழியைப் பொறுத்தவரை செந்தமிழே அதிக அக்கறைக்கு உட்பட்டது. செந்தமிழே சங்கங்கள் தொடங்குவதற்கும் மாநாடுகள் கூட்டுவதற்கும் அடிப்படையாகவும் அமைந்தது. பரதநாட்டியம், கர்நாடகசங்கீதம் ஆகியவை ஒரு பண்பட்ட தமிழ்ப் பெண்ணுக்குரிய கலைத்தேவைகளாயிருந்தன. பரதநாட்டியமும் சங்கீதமும் தமிழரின் தனிப்பெரும் கலையாக்கங்களாகக் கருதப்பட்டன. இவை விரைவில் மத்தியதர வர்க்கத் தமிழரின் முழுக்கவனத்தையும் கவர்வனவாகவும் மாறின. குறிப்பாக 1920 களின் ஆரம்பத்தில் பரதஐயர், ருக்மணி அருண்டேல் போன்றோரின் முயற்சியால் பரதநாட்டியம் புனர்ஜன்மம் பெற்றது. ஜி.வேங்கடாசலம் என்பவரின் விமர்சனக் கட்டுரைகள் இந்நடனவடிவத்தின் மரபுகளுக்கு மேலும் வளம் சேர்த்தன. 18 ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் பரதநாட்டியத்தின் நிலை தாழ்வுற்றிருந்தது. "சதிர்' என்று அழைக்கப்பட்ட அதனைச் தாசிகளுக்கும் பொதுமகளிருமே ஆடினர். ஆனால் ஜி.வேங்கடாசலத்திலிருந்து பேராசிரியர் வி.ராகவன் வரை அறிஞர்களும் விமர்சகர்களும் பரதநாட்டியத்தின் புனர் எழுச்சிக்காக உழைத்தனர். ஆனந்தகுமாரசாமியின் எழுத்துக்களில் அது மேலும் வளர்ச்சியும் உயர்ச்சியும் பெற்றது. அவரது ஆரம்பகால நூல்களான The Mirror of Gesture (1917) Dance of Shiva (1918) ஆகியவை பரதநாட்டியம் பற்றி எழுதுவோருக்கு உந்துதலாக அமைந்தன. கர்நாடக இசையும் பரதநாட்டியத்துடன் சேர்ந்து தெய்வீகக் கலை என்ற அந்தஸ்தைப் பெற்றது. தமிழ்மொழி, பரதம், கர்நாடக இசை என்பவை ஏற்கனவே வரையறைகளைப் பெற்றிருந்ததால் இவற்றில் புதிய பரிசீலனைகளோ புத்தாக்கமோ இடம் பெறமுடியாமல் போனது. இக்கலையில் பயிற்சியும் ஞானமும் பெறவிரும்புவோர்க்கு முற்கூட்டியே சில தகுதிகளும் வசதிகளும் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. உயர் வர்க்கத்தாரே இவற்றைப் பெற்றிருத்தல் கூடுமெனவும் கருதப்பட்டது. இதன் விளைவாக மக்களிடையே வழங்கிவந்த ஜனரஞ்சகமான கலைகள் ஆர்வலரும் ஆதரவாளரும் இன்மையால் அழியும் நிலை எய்தின. இதனால் ஐம்பதுகளின் பிற்பகுதி அறுபதுகளின் முற்பகுதி வரையிலும் நாட்டார்கலைகள் என விபரிக்கப்படும் ஜனரஞ்சககலைகள் பற்றி ஆராயவோ அவற்றை வளர்க்கவோ எத்தகைய இயக்கங்களும் இருக்கவில்லை, இவ்வாறு நாட்டார் இலக்கியத்திலும் கலைகளிலும் ஆர்வமற்ற நிலையானது கலை இலக்கியப் புரவலர்களின் வர்க்க அடிப்படையை ஐக்கியத்துக்குக்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றது. ""புராதன தெய்வீகக்கலைகள்' எத்தகைய அரசியல் கலப்புக்கோ, சமூக சீர்திருத்தம் அல்லது சமூக மாற்றத்துடன் தொடர்புள்ள எத்தகைய கருத்துக்கோ உட்படாமல் பேணப்பட்டன. வேறுவகையிற் சொன்னால் புதிய புதிய கருத்துகளை உள்வாங்கியும் அவற்றுக்கு உருவம் கொடுத்தும் இதனால் காலத்துக்கு காலம் புத்துயிர் பெற்றும் வந்த கலை வடிவங்கள் உயர் மத்தியதர வர்க்கத்தினால் அந்தஸ்து சின்னங்களாகவும் இனத்தனித்துவத்தின் சிறப்புக்கூறுகளாகவும் முத்திரையிடப்பெற்றன எனலாம்.

1950 கள்வரை இதுவே தமிழரின் மொழி, பண்பாடு பற்றிய விழிப்புணர்வின் இயல்பாக இருந்தது, தமிழறிஞர்களும், இலக்கிய கர்த்தாக்களுமான ஏ.பெரியதம்பிப்பிள்ளை (18991978), சோமசுந்தரப் புலவர் (18781953), மு.நல்லதம்பிப்புலவர் (18961958), துரையப்பாபிள்ளை முதலியோர் எப்போதுமே சிங்களத்தையும் தமிழையும் ஒற்றுமைப்பட்ட தாய்நாட்டின் இரு கண்களாகவும் இரு சகோதரிகளாகவும் இரு தோழியராகவும் கண்டு போற்றினர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் விருத்திகள் இத்தகைய நிலைமையை மாற்றத்தொடங்கின. இந்திய வம்சாவழியினரான 900,000 தமிழர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதும், தொடர்ந்துவந்த பாராளுமன்றத் தேர்தல்களில் சிங்களவரிடைய பிரதிநிதித்துவம் தொடர்ச்சியாக அதிகரித்ததும் தமிழர்கள் தம்மைத் தேசிய சிறுபான்மை இனமாக உணர வழிவகுத்தன. 1952 இல் கொழும்பில் தமிழர் பண்பாட்டுச் சங்கம் தொடங்கியது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. இச்சங்கத்தின் நோக்கம் தமிழர் பண்பாடு, வரலாறு முதலியவற்றை இலங்கையில் மாத்திரமன்றி, உலகின் ஏனைய பகுதிகளிலும் பரப்புதலாகும்.

இக்காலத்துப் பண்பாட்டு விழிப்புணர்வின் சில அம்சங்கள் கவனத்தைக் கவர்வனவாகும். தென்னிந்தியா "சொந்த நாடாக'த் தொடர்ந்து கருதப்பட்டபோதும், அதன் முக்கியத்துவம் குறைந்து வந்தது. இலங்கைத் தமிழரின் பண்டைய சமகால வரலாற்றில் கவனம் செலுத்துதல் தவிர்க்கமுடியாத தேவையாகவிருந்தது. தென்னிந்தியத் தமிழருக்கும் இலங்கைத் தமிழருக்கும் இடையே பல பொதுமையான இணைப்புகள் இருந்தபோதும் இருநாட்டு மக்களும் வெவ்வேறு அரசாங்கங்களின் கீழ் வெவ்வேறு பிரச்சினைகளுக்குட்பட்டு வாழ்பவர்கள், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மொழிவழக்கு வேறுபாடுகளும் தெளிவானவை எனவே முதற்தரமாக இலங்கைத் தமிழர்கள் இந்நாட்டில் அதிக அக்கறை காட்டத்தொடங்கினர். இந்த அக்கறை தமிழர் கண்ணோட்டத்தில் அமைந்தது என்பதில் ஐயமில்லை. இலங்கைக்குத் தமிழர் எப்போது, எங்கிருந்து வந்தனர்? அவர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளா? தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான உறவு யாது? இந்நாட்டின் கலாசார பண்பாட்டுத் துறைக்கு தமிழரின் பங்களிப்பு யாது? இத்தகைய வினாக்கள் அடிக்கடி கேட்கப்பட்ட. இக்காலத்திற்கு முந்திய தஸாப்தங்களில் முதலியார் சி.இராசநாயகம் ( 18701940), ஞானப்பிரகாச சுவாமிகள், அ.முத்துத்தம்பி, கே.வேலுப்பிள்ளை(18101944) போன்றோரும் ஏனையோரும் தமிழர் வரலாற்றில் அக்கறை காட்டியிருந்தனர். ஆனால் அவர்கள் வரலாற்றைக் கல்விக் கண்ணோட்டத்திலேயே நோக்கினர். ஆனால் 50ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்ட வரலாறுகள் கல்விக் கண்ணோட்டத்திற்கு அப்பாலும் சென்றன. எழுதப்பட்டன வினாக்கள் உணர்வு பூர்வமான ஈடுபாட்டையும் காலத்தின் தேவையையும் உணர்த்தின. பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை(19031968) 1956 இல் சங்கிலி என்னும் நாடகத்தை வெளியிட்டார். இலங்கைத் தமிழர் வரலாறு என்ற தலைப்பில் அதற்கு ஒரு முன்னுரையும் எழுதினார்.

இதனையடுத்து 1958 இல் சி.எஸ்.நவரத்தினத்தின் Tamils and Ceylon என்ற நூல் வெளிவந்தது. 1959 ஆண்டு கே.நவரத்தினத்தின் Tamil Elements in ceylon Culture என்ற நூலும் வெளிவந்தது. இந்த ஆர்வம் வரலாற்றுத் துறையுடன் மட்டும் அடங்கிவிடவில்லை. ஆனந்த குமாரசுவாமியின் பக்தரும் அவரது நூல்களைத் தமிழில் பிரபலியப்படுத்தியவருமான கே. நவரத்தினம் (18981962) இலங்கையிற் கலைகளின் வளர்ச்சி என்ற தமிழ நூலை 1954 இல் வெளியிட்டார். இத்தகைய போக்கு தொடர்ந்து வளர்ந்தது. இக்காலத்து ஆராய்ச்சிகள் பல Tamil Culture (1952-1966) என்ற சஞ்சிகையில் வெளிவந்தன. இச்சஞ்சிகைக்கு இலங்கையரான சேவியர் தனிநாயகம் ஆசிரியராக இருந்தார். இது சென்னையில் அச்சிடப்பட்டு வெளிவந்தது. ஏ.ஜே.வில்சனுடைய Culture and Language Rights in the Multinational Socity (1953) தனிநாயகத்தின் Tamil Culture- It?s past it?s present and its future with special reference to Ceylon (1955) டபிள்யூ.பாலேந்திராவின் Trincomali Bronzes(1953),எஸ்.கே.குணசேகரத்தின் Early tamil cultural Influences in South East Asia (1957) முதலிய கட்டுரைகள் இச்சஞ்சிகையில் வெளியானவையே. இக்கால உணர்வுடுப் போக்கிற்கு ஏற்றவகையில் எச்.டபிள்யூ. தம்பையா The Laws and Customs of ceylon tamils என்ற நூலையும் 1954 இல் வெளியிட்டார். இவ்வகையில் சமீபகாலப் பங்களிப்பு என எம்.டி.ராகவனின் Tamil culture in ceylon என்ற நூலைக் கூறலாம். பொதுவாக கூறுவதானால் தமிழர் பண்பாடு பற்றிய கருத்தோட்டம் பரந்த விளக்கத்தையும் உட்பொருளையும் பெற்றது. சி.சிவரத்தினத்தின் The tamils in Early ceylon (1964) என்ற நூல் இதற்கு உதாரணமாகும். இது மாத்திரமன்றித் தமிழ் பகுதிகளின் பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் புனரமைக்கவும் உலகத் தமிழரிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் இருந்தே தமிழர் பண்பாட்டு இயக்கம் அரசியல் ரீதியானதாகவும் தனது வர்க்க குணாம்சத்தையும் தத்துவசார்பையும் வெளிக்காட்டுவதாகவும் மாறியது.

No comments: